பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிர்ணயம் : அறிக்கை சமர்பிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

By செய்திப்பிரிவு

பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் 2009 விதிகளின்படி, நடப்பு கல்வியாண்டில் (2021-22)கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட உள்ளன.

அதன்படி, பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பிரிவுகளில் 60மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும், 61 முதல் 90 வரை 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 வரை 4 ஆசிரியர்களும், 121 முதல் 200 வரை 5 ஆசிரியர்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.

இதுதவிர, 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 3 ஆசிரியர்கள், 6 முதல் 10-ம் வகுப்புக்கு 5 ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும். மேலும், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும்போது ஒருவருக்கு வாரத்துக்கு குறைந்தபட்சம் 28 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இதேபோல, ஆங்கிலவழிப் பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். அதற்குகுறைவாக இருப்பின், அதில்உள்ள மாணவர்களை அருகேஉள்ள பிற பள்ளிகளில் சேர்க்க வேண்டும். உபரி பணியிடம் கண்டறியப்பட்டால், கடைசியாக அப்பள்ளியில் பணியில் சேர்ந்த இளைய ஆசிரியரை உபரிப் பட்டியலில் சேர்த்து, பணிநிரவல் செய்ய வேண்டும்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்களை பணிநிர்ணயம் செய்து, அதன் விவரங்களை, பள்ளிக்கல்விஇயக்குநரகத்தில் ஒப்படைக்கவேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்