மத்திய உயர்கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில், 1,962 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
சென்னை ஐஐடி-ன் 58-வது பட்டமளிப்பு விழா மெய்நிகர் முறையில் (நேரடி மற்றும் இணையவழி) நேற்று மாலை நடைபெற்றது.
சென்னை ஐஐடி ஆளுநர்கள் குழுத் தலைவர் பவர் கோயங்கா தலைமை வகித்தார். சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர ராமமூர்த்தி, 1,962 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பல்கலைக்கழக அளவில் சிறந்து விளங்கிய 4 பேருக்கு பதக்கங்களையும் வழங்கினார்.
பத்மபூஷண் விருது பெற்ற பேட்மின்டன் வீராங்கனை சி.வி.சிந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் பேசும்போது, "பட்டம் பெற்றுள்ள மாணவர்கள், அவர்களது பெற்றோர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடின உழைப்பால் நீங்கள் இந்த இடத்தை அடைந்திருப்பீர்கள்.
ஆனால், இது முடிவல்ல. வாழ்வில் இன்னும்அதிகம் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். உங்களுக்குப் பிடித்த, புதுமையான விஷயங்களில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அதன் வெற்றி, தோல்விகளைப் பற்றி கவலை கொள்ளவேண்டாம்" என்றார்.
ஆண்டறிக்கையை வெளியிட்டு இயக்குநர் பாஸ்கர ராமமூர்த்தி பேசும்போது, "கரோனா பரவல் காரணமாக தொடர்ந்து 2-வது முறையாக மெய்நிகர் முறையில் பட்டமளிப்பு விழா நடத்தப்படுகிறது. இந்த கல்வியாண்டில் அதிகபட்சமாக 392 மாணவர்கள் பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளனர்.
கரோனா பரவல் அச்சுறுத்தல் காலகட்டத்திலும், தேசிய அளவில் சென்னை ஐஐடி-தான் ஆராய்ச்சிப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. நடப்பாண்டு 5 சர்வதேச மற்றும் 124 இந்திய காப்புரிமைகள், எங்களின் கண்டுபிடிப்புகளுக்கு கிடைத்துள்ளன" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago