உடுமலையில் ஸ்கேட்டிங் மைதானத்தை சீரமைக்க பொள்ளாச்சி எம்.பி. வலியுறுத்தல் :

உடுமலையில் உள்ள நேதாஜி மைதானத்தில் கூடைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, ரோலர் ஸ்கேட்டிங் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2014-15-ம் ஆண்டில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதிமேம்பாட்டு நிதி மூலம் ரூ.20 லட்சம் மதிப்பில் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் ஏற்படுத்தப்பட்டது. கரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் மிக நீண்ட இடைவெளிக்குப்பின், ஸ்கேட்டிங் பயிற்சியை மாணவர்கள் தொடங்கியுள்ள நிலையில், கொட்டித்தீர்த்த பருவ மழையால் மைதானத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, ‘‘இம்மைதானத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தரமற்ற கட்டுமானப் பணிகளால்தான், மைதானத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

புகாரின் பேரில் நேரில் மைதானத்தை ஆய்வு செய்த பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் கூறும்போது, ‘‘நேதாஜி மைதானத்தில் பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்துதருவது பொதுப்பணித் துறையினரின் கடமை. ஸ்கேட்டிங் மைதானத்தில் மழை நீர் தேங்குவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE