தாராபுரம், குண்டடம் பகுதிகளில் கனமழை - வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலம் :

By செய்திப்பிரிவு

தாராபுரம் மற்றும் குண்டடம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. 17-ம் தேதி இரவு தொடர்ச்சியாக 7 மணி நேரம் இடைவிடாது கொட்டி தீர்த்த மழையால் 20 செ.மீ., மழை பதிவானது. தமிழகத்தில் பெய்த மிக கனமழையாக இது அறிவிக்கப்பட்டது. இதில் தாராபுரத்தில் சின்னகடை வீதி, வள்ளுவர் தெரு, புறவழிச் சாலை உட்பட 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது.

குண்டடம், பொன்னாபுரம், வரப்பாளையம், ஊத்துப்பாளையம், தாராபுரம் வடக்கு, வீராச்சி மங்கலம் பகுதிகளில் சுமார் 30 வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 100 ஏக்கர் பரப்பில் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

தாராபுரம், நகராட்சிக்குட்பட்ட தில்லாபுரி அம்மன் கோயில் செல்லும் சாலையில் 3 மாதங்களுக்கு முன் நகராட்சியால் கட்டப்பட்ட தரைப்பாலமும், அதனுடன் இணைந்த தார் சாலையும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இச்சாலை அங்குள்ள 2 முக்கிய கோயில்களுக்கு செல்லும் பாதையாக பயன்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல தனியாருக்கு சொந்தமான காடை வளர்ப்பு பண்ணையில் மழை நீர் புகுந்ததில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட காடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வருவாய்துறையினர் கூறும்போது, ‘‘மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடி நிவாரண தொகையாக தலா ரூ.5,500 வழங்கப்படும். கனமழையின்போது நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்ட பொதுமக்கள், சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பி விட்டனர்,’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்