கோவை: கோவை மதுக்கரையில் குடியிருப்பு வளாகத்தில், அவுட்டுக்காய் வெடித்து நாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மதுக்கரையில் உள்ள பாலு கார்டன் குடியிருப்பு வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வளாகத்தில் வளர்க்கப்பட்டு வந்த நாய், நேற்று காலை அங்குள்ள வீட்டு முன்பு கிடந்த ஒரு பொருளை கடித்தது. அப்போது அந்தப் பொருள் வெடித்து, நாயின் வாய்ப்பகுதி சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தது. நாட்டு வெடி வெடித்து நாய் உயிரிழந்து விட்டதோ என அச்சமடைந்த குடியிருப்புவாசிகள் மதுக்கரை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். குடியிருப்புவாசிகள் கூறும்போது, “கடந்த வாரமும் இதேபோல குடியிருப்பு வளாகத்தில் கிடந்த பொருள் மீது ஒரு கார் ஏறியபோது, அந்த பொருள் வெடித்தது. கார் வேகமாகச் சென்றதால், பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை” என்றனர். போலீஸார் விசாரணையில், ‘அவுட்டுக்காய்’ எனப்படும் வன விலங்குகளை கொல்ல பயன்படுத்தப்படும் வெடிபொருளை நாய் கடித்ததால் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த அவுட்டுக்காய் குடியிருப்பு வளாகத்துக்குள் எப்படி வந்தது என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago