பாலியல் புகாரில் கைதான - 2 தற்காலிக மருத்துவர்கள் பணிநீக்கம் :

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட தற்காலிக மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளில் சுழற்சி முறையில் கரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, தனிமைப்படுத்தும் விதமாக தனியார் ஓட்டல்களில் மருத்துவர்கள் தங்கவைக்கப்பட்டனர்.

அந்த வகையில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் தற்காலிக ஒப்பந்த மருத்துவர்கள் சிலர் தி.நகரில் உள்ள ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அங்கு தங்கியிருந்த 2 பெண் மருத்துவர்களிடம் அதே ஓட்டலில் தங்கியிருந்த மருத்துவர்கள் வெற்றிச்செல்வன் (35), மோகன்ராஜ் (28) ஆகியோர் தகாத முறையில் நடந்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக வெற்றிச்செல்வனையும், பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மோகன்ராஜையும் 18-ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், தற்காலிக ஒப்பந்த மருத்துவர்கள் வெற்றிச்செல்வன், மோகன்ராஜ் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபுவிடம் கேட்டபோது, “ பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE