தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால், ஏசி பேருந்துகளின் சேவை 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைக்காலம் என்பதால் மக்கள் வெளியூர் பயணத்தைத் தவிர்த்து வருகின்றனர். இதனால், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயக்கப்படும் 700-க்கும் மேற்பட்ட வெளியூர் ஏசி பேருந்துகளில் 50 சதவீத சேவை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்ட ஏசி பேருந்துகளின் சேவையும் குறைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கனமழை பெய்து வருவதால், வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளிலேயே பயணிகள் கூட்டம் மிகவும் குறைந்துள்ளது. இதனால் மக்களின் தேவையை கருத்தில்கொண்டு அரசு பேருந்துகளை இயக்கி வருகிறோம். சில வழித்தட ஏசி பேருந்துகளில் பயணிக்க ஓரிரு டிக்கெட் மட்டுமே முன்பதிவு ஆகிறது. எனவே ஓரளவுக்கு டிக்கெட் முன்பதிவாகும் வழித்தடங்களில் மட்டுமே ஏசி பேருந்துகளை இயக்கி வருகிறோம். சுமார் 50 சதவீத ஏசி பேருந்துகளின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, மீண்டும் அதிக அளவில் பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago