இந்தியாவில் முதல்முறையாக - 3டி தொழில்நுட்பத்தில் 3 பேருக்கு கண்புரை அறுவைசிகிச்சை : எழும்பூர் அரசு கண் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

இந்தியாவில் முதல் முறையாக 3டி தொழில்நுட்பத்தில் 3 பேருக்கு கண்புரை அறுவைசிகிச்சை செய்து சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் நேற்று 3டி தொழில்நுட்பத்திலான கண்புரை அறுவைசிகிச்சை 3 நபர்களுக்கு செய்யப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறுவைசிகிச்சை செய்த மருத்துவக் குழுவினரை பாராட்டினார்.

சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் எம்.வி.எஸ்.பிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இன்று இந்தியாவில் முதல் முறையாக 3டி தொழில்நுட்பத்தின் மூலம் கண்புரை அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான உதவிகளை தனியார் அமைப்பு செய்து வருகிறது.

2025-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் கண் பார்வை குறைபாட்டை 0.25 சதவீதத்துக்குள் கொண்டுவர வேண்டுமென்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை நோக்கி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

அரசு கண் மருத்துவமனைகளில் இந்த ஆண்டு 65 ஆயிரம் பேருக்கு கண்புரை அறுவைசிகிச்சை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 20,670 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதேபோல, 10 ஆயிரம் நபர்களின் கண்களை தானம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 2,213 நபர்களின் கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 1,250 இடங்களில் வரும் முன் காப்போம் திட்டம் நடத்தப்படுகிறது. அதில், கண் பரிசோதனையும் நடைபெறுகிறது. தேவைப்படுபவர்களுக்கு கண்ணாடி தரப்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு அருகிலேயே ரூ.66 கோடி செலவில் ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டுள்ளது. அந்த மையத்துக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் வாங்கப்படும். இந்த மையத்தை முதல்வர் திறந்துவைப்பார்.

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட 2 தற்காலிக மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். இப்போது தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. 74 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதனால், ஓட்டல்களில் மருத்துவர்கள், செவிலியர்களை தங்க வைப்பது தேவையில்லை. தொற்றில் இருந்து குணமடைந்தவர்களில் 4 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டனர். தற்போது கருப்பு பூஞ்சை பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE