தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதுதவிர, நேற்று முன் தினம் இரவு மிகக் கனமழைபெய்தது. மழையால் அரூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. அரூர் பெரிய ஏரி நிரம்பிய பின்னர் வெளியேறும் தண்ணீர் ராஜ வாய்க்கால் வழியாகச் சென்று வாணியாற்றில் கலக்கும். இந்த ராஜ வாய்க்கால் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அதன் அகலம் குறைந்துள்ளது.
எனவே, மழைக்காலங்களில் தாழ்வான இடத்தை நோக்கி மழைநீர் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, நேற்று முன் தினம் பெய்த கனமழையால் அரூரில் பெரியார் நகர், தில்லை நகர், பாரதியார் நகர், திருவிக நகர், கோவிந்தசாமி நகர், சேலம் பிரதான சாலை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
அப்பகுதி மக்கள் இதுகுறித்து கூறும்போது, ‘அரூர் பெரிய ஏரியில் இருந்து வாணியாறு நோக்கி செல்லும் ராஜ வாய்க்காலை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் தீர்வு ஏற்படுத்த வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago