வேளாண் சட்டங்களைப் போல் - பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் : ஈரோட்டில் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ வலியுறுத்தல்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது போலவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்தார்.

ஈரோட்டில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை பிரதமர் மோடி திரும்பப் பெற்றுள்ளார். விவசாயிகள் மீதான பரிவால் இதனை அவர் திரும்பப் பெறவில்லை. 15 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது.

அடுத்து நடக்கவுள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பயத்தினால்தான் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற்றுள்ளார்.

ஆனால், இந்திய விவசாயிகள் பாஜகவை ஏற்கவோ, நம்பவோ மாட்டார்கள். இனிவரும் காலங்களில் படுதோல்வியை பாஜக சந்திக்கும். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது போன்று, பெட்ரோல், டீசல் விலையைத் திரும்பப் பெற வேண்டும். அதற்கான மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும், என்றார். ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE