தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வீதம் நீர்வரத்து பதிவானது.
இந்நிலையில், நேற்று காலை விநாடிக்கு 57 ஆயிரம் கன அடியாக அதிகரித்த நீர்வரத்து, நேற்று மாலை விநாடிக்கு 67 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்கிறது. இது தவிர, தமிழகத்தை நோக்கி வரும் காவிரியாறு அமைந்துள்ள வனப் பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்கிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரியாற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, ஒகேனக்கல் காவிரியாற்றில் பாறைகளை மூழ்கடித்தபடி இருகரையையும் வெள்ளம் தொட்டபடிஓடுகிறது. பிரதான அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
தொடர் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக தருமபுரி மாவட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்க அரசுத் துறை அதிகாரிகள் கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
60 ஆயிரம் கனஅடி திறப்பு
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மதியம் 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. அணையில் உள்ள சுரங்க மின் நிலையம் வழியாக விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடியும், 16 கண் மதகு வழியாக 38 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், பாசனத்துக்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 93.63 டிஎம்சி-யாக உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago