கால்வாய் ஆக்கிரமிப்பால் காட்பாடி மதி நகர் குடியிருப்புகளில் புகுந்த மழைநீர் :

By செய்திப்பிரிவு

வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட மதிநகர், பேங்க் நகர் பகுதியில் கடந்தஒரு வாரமாக மழைநீர் தேங்கியுள் ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமார் 3 அடி தண்ணீர் தேங்கியுள்ளதால் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

மழைநீர் அதிகளவில் தேங்கி இருப்பதற்கு கழிஞ்சூர் ஏரியில் இருந்து மதி நகர் வழியாக செல்லும் பாண்டியன் கால்வாய் ஆக்கிரமிப்பே காரணம் என கூறப்படுகிறது. கழிஞ்சூர் ஏரி மற்றும் தாராபடவேடு ஏரிகளின் உபரி நீர் சுமார் 60 அடி அகலம் கொண்ட பாண்டியன் கால்வாய் வழியாக ஓடை பிள்ளையார் கோயில் அருகே சாலையை கடந்து காங்கேயநல்லூர் வழியாக பாலாற்றில் கலக்கிறது.

இதில், அருப்புமேடு சாலையில் 60 அடி அகலமுள்ள கால்வாய், காந்திநகர் மேற்கு துணை மின் நிலையம் அருகே வரும்போது சுமார் 15 அடியாகவும், கனியமுது திருமண மண்டபம் அருகே வரும்போது 10 அடியாகவும் சுருங்கிவிடுகிறது. இதனால், அதிகப்படியான மழைநீர் வெளியேற வழியில்லாமல் மதி நகர், பேங்க் நகர் பகுதியில் தேங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டு மழைக்காலங்களிலும் இதே போன்று மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தேங்குவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தாண்டு கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பெய்து வரும் தொடர் மழையால் வெள்ள நீர் வடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக சுமார் 1 அடி அளவுக்கு தேங்கிய தண்ணீர் நேற்று பகல் நேரத்தில் 3 அடி அளவுக்கு உயர்ந்துவிட்டது. மதிநகர், பேங்க் நகரில் அதிகளவில் மழைநீர் தேங்குவதால் கனியமுது திருமண மண்டபம் சாலையில் உள்ள கால்வாய் மீது போடப்பட்ட ஸ்லாப்புகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள் மழைநீர் சுலபமாக வெளியேற வழி செய்தனர்.நிலைமை ஓரளவுக்கு சீரடைந்தா லும், கால்வாய் ஆக்கிரமிப்பை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றுவதுடன் கான்கிரீட் சுவர் அமைத்தால் வரும் நாட்களில் இதுபோன்ற பிரச்சினை எழாமல் இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்