தமிழகத்தில் முக்கியமான - 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் மிக முக்கியமான 8 மாநில நெடுஞ்சாலைகளை புதிய தேசிய நெடுஞ்சாலைகளாக உடனடியாக அறிவித்து, மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டா லின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் மோடிக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்புகளின் மேம்பாட்டுக்கான பணிகளை சரியான முறையில் செய்து வருவதற்கு மத்திய அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள திருவண்ணாலை - கள்ளக்குறிச்சி (65 கிமீ), வள்ளியூர்- திருச்செந்தூர் (70 கிமீ), கொள்ளேகால் - ஹனுர்- எம்எம் ஹில்ஸ் - பாலார் சாலை - மேட்டூர் (30), பழனி - தாராபுரம் (31), ஆற்காடு - திண்டிவனம் (91), மேட்டுப்பாளையம் - பவானி (98), அவிநாசி - மேட்டுப்பாளையம் (38), பவானி - கரூர் (77) ஆகிய 8 மாநில சாலைகளை (மொத்தம் 500 கிமீ) தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற கடந்த 2016 மற்றும் 17 ஆகிய ஆண்டுகளில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இதற்கான விரிவான திட்டஅறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 2017 18-ம் ஆண்டு திட்டத்தின்கீழ் இந்த 8 சாலைகள்தொடர்பான விரிவான ஆய்வு மாநில தேசிய நெடுஞ்சாலைகள் பிரிவால் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அந்த 8 சாலைகளையும் தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிப்பதற்கான பரிந்துரை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் கடந்த 2018 டிசம்பர் 6-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால், இந்த சாலைகளை புதிய தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிப்பது குறித்த அறிவிக்கை சாலை போக்குவரத்து அமைச்சகத்தால் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த 8 சாலைகளும் மிக முக்கியமானவை என்பதுடன், முக்கியமான வழிபாட்டுத் தலங்களான திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி மற்றும்வர்த்தகம், சுற்றுலாத் தலங்களையும் இணைக்கின்றன. எனவே,இந்த சாலைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேம்பாட்டுப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தற்போது மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், புதிய தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாடு தொடர்பான விதிமுறைகளை வகுத்து வருவதாக அறிகிறேன். ஆனால், ஏற்கெனவே இந்த 8 சாலைகளுக்கும் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், விதிமுறைகளுக்கு காத்திருக்காமல், அவற்றை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்கை செய்யலாம். இதுபற்றி மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகத்துக்கு தாங்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, இந்த 8 சாலைகளையும் புதிய தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்கை செய்து, தேவையானமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு மாநில அரசுக்கு தேவையான நிதியையும் வழங்க வேண்டும்.

இந்த சாலைகள் தொடர்பான மேம்பாட்டுப் பணிகளுக்கு மாநிலஅரசு முழு ஒத்துழைப்பும் வழங்கும் என்று உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்