மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசின் நிவாரண அறிவிப்பு குழப்பமாக உள்ளது என டெல்டா மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்ததைத் தொடர்ந்து நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதையடுத்து, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நவ.12 அன்று டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.13-ம் தேதி இம்மாவட்டங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்து, முழுமையாக பாதிக்கப்பட்ட குறுவை, கார், சொர்ணவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்றும், நீரில் மூழ்கி சேதமடைந்த சம்பா பயிர்களை மறு சாகுபடி செய்ய ஏதுவாக, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6,038 மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பு குழப்பமாக இருப்பதாக டெல்டா விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: தமிழக முதல்வரின் இந்த நிவாரண அறிவிப்பு குழப்பமாக உள்ளது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் என அரசு தெரிவித்துள்ளது. குறுவை அறுவடை ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. 68,852 ஹெக்டேருக்கும் தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்படுமா எனத் தெரியவில்லை. மறு நடவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.6,083 இடுபொருட்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், எத்தனை ஹெக்டேருக்கு என தெளிவுபடுத்தப்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் நிவாரண உதவிகளை அரசு விரிவுபடுத்தி வழங்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் கே.வீ.இளங்கீரன் கூறியது: விவசாயிகள் சாகுபடி செலவாக ஏக்கருக்கு ஏறத்தாழ ரூ.20 ஆயிரம் செலவு செய்துள்ள நிலையில், ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் அறிவித்திருப்பது போதுமானதல்ல. விவசாயிகளை கண் போல் காப்போம் என முதல்வர் தெரிவித்து வரும் நிலையில், அரசு ஏதாவது செய்யும் என நம்பிக்கையுடன் காத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த நிவாரண அறிவிப்பு ஏமாற்றத்தை தான் அளிக்கும்.
பாதிக்கப்பட்ட பயிர்கள் எந்த அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டது என்பதும், அரசு அறிவித்துள்ள 68,852 ஹெக்டேர் என்பது எந்தந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு பரப்பளவு என்பதும் தெரியவில்லை. இதனால் விவசாயிகளுக்கு குழப்பமே ஏற்பட்டுள்ளது என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி கூறியிருப்பதாவது: கனமழை பாதிப்பின் இழப்பை சரியாக மதிப்பிடாமல் அவசர கோலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. குறுவை அறுவடை நிறைவுறும் நிலையில் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகம் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு வெறும் ரூ.6,038, அதுவும் பண உதவியாக இல்லாமல் இடுபொருள் மானியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர் குழுவினரும், முதல்வரும் வந்து பார்வையிட்டதால், அரசு கட்டாயம் முழுமையாக உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர். ஆனால், அரசின் அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது. இது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். எனவே அரசு மறுபரிசீலனை செய்து, நீரில் மூழ்கிய சம்பா, தாளடி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரம் என அறிவிக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago