மழைநீர் கால்வாய்களில் அடைப்புகளை நீக்க - மாநகராட்சி சார்பில் ‘சூப்பர் சக்கர்’ வாகனம் அறிமுகம் :

By செய்திப்பிரிவு

கோவையில் மழைநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீரமைக்க அதிக நீரேற்றுத் திறன் கொண்ட ‘சூப்பர் சக்கர்’ வாகனம் மாநகராட்சி சார்பில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

மாநகரில் மழைநீர் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்வதற்கும், ஆளிறங்கு பள்ளங்களில் சேகரமாகியுள்ள கழிவுகளை தூர்வாருவதற்கும் அதிக திறன் கொண்ட கழிவுநீர் உந்து மற்றும் அடைப்புகளை சரி செய்யும் ‘சூப்பர் சக்கர்' வாகனம் கோவை மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் உள்ள பம்ப் மணிக்கு 85 ஆயிரம் லிட்டர் நீரை உறிஞ்சும் திறன் கொண்டது. சேகரமாகும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் உபயோகிக்கும் தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளது. சூப்பர் சக்கர் வாகனமானது தற்போது ராமநாதபுரம் சந்திப்பு, திருச்சி சாலை, ஒலம்பஸ், பாரத ஸ்டேட் வங்கி சாலை, நஞ்சுண்டாபுரம், கிருஷ்ணசாமி சாலை போன்ற முக்கியப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை தூர்வாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்