மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் - கரோனா உயிரிழப்பை உறுதி செய்ய குழு அமைப்பு : மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து இறப்பு சான்றிதழ் பெறலாம்

கரோனா இறப்பை உறுதி செய்ய, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிறப்பு, இறப்புக்கான இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

பிறப்பு, இறப்பு பதிவு குறித்து, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் மற்றும் பிறப்பு, இறப்புக்கான இணைப்பதிவாளர் கே.சி.தேவசேனாதிபதி தலைமையில் கோவையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அவர் பேசும்போது, ‘‘கரோனா பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு கரோனா தொற்றுக்கான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். கரோனா தொற்றை உறுதி செய்யும் முன்பே தற்கொலை, விபத்து உள்ளிட்ட இதர காரணங்களினால் உயிரிழக்க நேரிட்டால், கரோனா தொற்று இறப்புக்கான சான்றிதழ் வழங்க முடியாது. கரோனா உறுதி செய்யப்பட்டு, குணமாக்க இயலாமல் வீட்டிலோ, மருத்துவமனையிலோ 30 நாட்களுக்குள் உயிரிழக்க நேரிட்டால் அது கரோனா தொற்று இறப்பாக கருதி சான்றிதழ் வழங்கப்படும்.

இதுதொடர்பான அரசாணையின்படி, கரோனா இறப்பை உறுதி செய்யும் குழு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் உதவியோடு நோயினால் உயிரிழந்ததற்கான ஆவணங்கள் இருப்பின், அதனை இக்குழுவின் முன் சமர்ப்பித்து சான்று பெற்றுக் கொள்ளலாம். சான்றிதழ் பெற மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம்.

1969-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நிகழ்ந்த பிறப்பு, இறப்பு பதிவேடுகள் ரூ.75 லட்சம் செலவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று அலையாமல் இணையவழி மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’’ என்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம், சுகாதாரப் பணிகள் இணைஇயக்குநர் அருணா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE