ரேஸ்கோர்ஸ் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் : மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

கோவையில் மேம்பாட்டுப் பணிகளுக்காக தோண்டப்பட்ட ரேஸ்கோர்ஸ் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சி சார்பில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.40.67 கோடி மதிப்பீட்டில் ரேஸ்கோர்ஸ் சாலையை மாதிரி சாலையாக மாற்றியமைக்கும் பணி கடந்தாண்டு மே மாதம் தொடங்கியது. இதில் ஸ்மார்ட் சிட்டி நடைபாதை மற்றும் வாகனங்கள் செல்லும் சாலையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.புதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப் படுகின்றன. இந்நிலையில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் மேற்கு மண்டலகாவல் துறை தலைவர் அலுவலகம் அருகே செல்லும் சாலையை மேம்படுத்துவதற்காக கடந்த மாதம் தோண்டி எடுக்கப்பட்டது. சாலையின் மேற்புறத்தில் மீண்டும் தார் சாலை அமைப்பதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வெட்டியெடுக்கப்பட்ட பகுதியில் சோதனை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தார் சாலை அமைக்கப்பட்டது. பிறகு தார் சாலைப் பணியானது கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சாலை தோண்டப்பட்ட பகுதியில் மேடு, பள்ளமாக உள்ளதால்மழை நேரங்களில் தண்ணீர் தேங்கு கிறது. மழை இல்லாத நேரங்களில் காற்றில் புழுதி கிளம்புகிறது. ஜல்லிக் கற்கள் சிதறிக் கிடக்கின் றன. தொலைத்தொடர்பு கேபிள் குழாய்கள் வெளியில் தெரிகின்றன. பிரதான மற்றும் போக்குவரத்து அதிகம் நிறைந்த சாலை என்பதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தொடங்கி, நடைபயிற்சி செல்வோர் வரை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப் பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் குடியிருப்போர் நலச் சங்க செயற்குழு உறுப்பினர் ஜே.சதீஷ் கூறியதாவது:

சாலையைத் தோண்டி எடுத்து,புதிய சாலை அமைப்பது நல்ல செயல்பாடு. சாலையின் உயரம் இதனால் அதிகரிக்காது. ஆனால் சாலையைத் தோண்டிய ஓரிரு தினங்களில் அமைத்திருக்க வேண்டும். இத்தனை நாட்கள் கிடப்பில் போட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மழை பெய்வதால் காற்றில் புழுதிகிளம்புவதில்லை. இல்லையெனில் அவ்வழியே நடக்கக் கூட முடியாது. மக்களின் பாதிப்பை உணர்ந்து இதனை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE