கோவை மாவட்ட வேளாண்மைஇணை இயக்குநர் இரா.சித்ராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் 88,467 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், வறட்சி, இடிமின்னல் மற்றும் கனமழையினால் பாதிக்கப்படும் தென்னை மரங்களுக்கு இழப்பீடு பெற அனைத்து விவசாயிகளும் தென்னை, பனைமரம் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடுசெய்து கொள்ளவும். இத்திட்டத்தின் கீழ் குட்டை மற்றும் ஒட்டு ரக தென்னை மரங்களை 4-ம் ஆண்டுமுதலும், நெட்டை மரங்களை 7-ம் ஆண்டு முதல் 60-ம் ஆண்டு வரையிலும் காப்பீடு செய்யலாம். ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கடிய நல்ல ஆரோக்கியமான மரங்களை காப்பீடு செய்யலாம். ஒரு ஹெக்டேருக்கு 175 தென்னை மரங்களை மட்டுமே காப்பீடு செய்ய முடியும்.
4 முதல் 15 வயது வரையுள்ள மரங்களுக்கு ரூ.2.25 -ம் 16 வயது முதல் 60 வயது வரையுள்ள மரங்களுக்கு ரூ.3.50-ம் பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். பிரீமியம் தொகைக்கான வரைவோலையை ‘அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட், சென்னை’ என்ற பெயரில் எடுக்க வேண்டும். 4 வயது முதல்15 வயது வரையுள்ள மரங்களுக்கு காப்பீட்டுத் தொகையாக, மரம் ஒன்றுக்கு ரூ.900, 16 வயது முதல் 60 வயது வரையுள்ள மரங்களுக்கு தலா ரூ.1,750 வழங்கப்படும்.
காப்பீடு செய்வதற்கு முன்மொழிவு படிவத்துடன், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் அடங்கல், புல எண் வரைபடம், விவசாயிகளின் புகைப்படம் மற்றும் சுய அறிவிப்புக் கடிதம், வட்டார வேளாண் உதவி இயக்குநரின் காப்பீட்டுத் திட்டத்துக்கான சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், காப்பீட்டுக் கட்டணத்துக்கான வரைவோலையுடன், அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட், சென்னை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago