‘சைபர் கிரைம் வழக்குகளில் : நீலகிரியில் ரூ.4.74 லட்சம் மீட்பு’ :

உதகை: நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொலைந்துபோனதாக புகார் அளிக்கப்பட்டு, போலீஸாரால் மீட்கப்பட்ட மொபைல்போன்களை, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மொபைல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்த பின்பு நீலகிரி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஜி.முத்துமாணிக்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையத்தில் ஆன்லைன் பண மோசடி, ஆபாச படங்களை மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற ஆன்லைன் குற்றங்களை போலீஸார் கண்காணித்து வருகின்றனர். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் பிலிப், காவல் உதவிஆய்வாளர்கள் சக்திவேல், அவினாஷ் விஷால், காவலர்கள் யசோதா, சிந்துஜா, கருணாகரன் ஆகியோரது முயற்சியால் மாவட்டத்தில் நடந்த ஆன்லைன் மோசடி உள்ளிட்ட சைபர் கிரைம் வழக்குகளில் இதுவரை ரூ.4 லட்சத்து 74 ஆயிரம் ரொக்கம் மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ரூ. 8 லட்சத்தை நீதிமன்ற உத்தரவுபெற்று மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தொலைந்துபோனதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்ட, ரூ.8 லட்சம் மதிப்புள்ள 40 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE