கடந்த ஆட்சியில் சரியாக திட்டமிடப்படாததே : சென்னை வெள்ள பாதிப்புக்கு காரணம் : கொமதேக பொதுச்செயலர் குற்றச்சாட்டு

கடந்த ஆட்சியில் சரியாக திட்டமிடப்படாததே தற்போதைய சென்னை வெள்ளப் பாதிப்புக்கு காரணம் என கொமதேக பொதுச்செயலர் ஈஸ்வரன் எம்எல்ஏ குற்றம்சாட்டினார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் தொழில்துறையினருடனான ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொள்ளாச்சியில் மிகப்பெரிய தொழிலாக இருக்கின்ற தென்னை நார் தொழிற்சாலைகள் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளன. சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி வர்த்தகம் தென்னை நார் தொழிற்சாலைகள் மூலம் நடைபெற்று வருகிறது.

அந்த தொழில்துறையினருக்கு அரசு நம்பிக்கை தர வேண்டும். சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பில்லாமல் தொழிற்சாலைகளை இயக்க அனுமதிக்க வேண்டும்.

பொள்ளாச்சி வழியாக சென்ற ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திரைப்படத் துறையினர் எந்த சமுதாயத்தையும் புண்படுத்தாமல் படம் எடுக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான கருத்துகளை மக்களிடையே விதைக்கும் முயற்சிகளை செய்ய வேண்டும்.

கடந்த ஆட்சியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவு செய்து 950 கிலோமீட்டர் தூரத்துக்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதாகவும், சென்னையை வெள்ள பாதிப்பிலிருந்து மீட்டு இருக்கிறோம் என்றும் முன்னாள் முதல்வர் தெரிவித்திருந்தார். ஆனால், வெள்ள காலங்களில் முன்பு சென்னை எப்படி இருந்ததோ அதே போலத்தான் இப்போதும் உள்ளது. சரியாக திட்டமிடப்படாததே இதற்கு காரணம். இதுகுறித்து விசாரணை நடத்தப்படவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE