தொடர் மழை காரணமாக ராசிபுரம் சுற்றுவட்டாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயத்தில் வேர் அழுகல் நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் ஆயிரக்கணக்கன ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்குஉற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயம் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சின்ன வெங்காயம் செடிகளில் வேர் அழுகல் நோய் தாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூல் பாதிக்கும் என்பதால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து ராசிபுரம் அரியாகவுண்டம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சரவணன் கூறியதாவது:
ஆடிப்பட்டம், கார்த்திகைப் பட்டம், வைகாசி பட்டம் என மூன்று காலங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த இரு மாதங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் 40 நாள் கடந்த மற்றும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சின்னவெங்காயத்தில் வேர் அழுகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ள வெங்காய தாள்களில் பழுப்பு நிறம் காணப்படும். இதனால் மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோல் தொடர் மழையால் காய்கறி செடிகளில் பூக்கள் உதிர்ந்து உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் காய்கறிகளின் விலை ஏற்றம் காணும் நிலை உள்ளது. பாதிப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க உற்பத்தி மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. மானியத் தொகை வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை ஈடு செய்ய முடியும். விலை உயர்வும் கணிசமான அளவில் தவிர்க்கப்படும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago