சாலையோரங்களில் கட்டப்படும் கால்நடைகளால் விபத்து அபாயம்; தடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை :

தருமபுரி மாவட்ட சாலை ஓரங்களில் மேய்ச்சலுக்காக கட்டப்படும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் தேசியநெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை மூலம் நிர்வகிக்கப்படும் சாலைகள் என பல நூறு கிலோ மீட்டர் நீள சாலைகள் உள்ளன. இச்சாலையோரங்களில் பல இடங்களில் அந்தந்த பகுதியில் கால்நடைகளை வளர்க்கும் சிலர் ஆடு,மாடு, எருமைகளை மேய்ச்சலுக்காக கட்டி வைக்கின்றனர். இவ்வாறு கட்டப்படும் கால்நடைகளில் பெரும்பாலானவை சில நேரங்களில் சாலைகளில் குறுக்கிட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. இவ்வாறான செயல்களை கட்டுப்படுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் சிலர் கூறியது:

தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், கிராம சாலைகள் எனபல இடங்களில் சாலையோரங்களில் மேய்ச்சலுக்காக கட்டப்படும்கால்நடைகளில் பெரும்பாலானவை அவ்வப்போது சாலைகளில் நுழைந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.

சாலையோரங்களில் கட்டப்பட்டு மேய்ச்சலில் ஈடுபடும் இதுபோன்ற கால்நடைகள் சில நேரங்களில் மிரட்சியடைந்து சாலைக்குள் திடீரென நுழையும் சம்பவங்களும் நடக்கிறது. இவ்வாறு திடீரென நுழையும் கால்நடைகளால் அவ்வப்போது சிறுசிறு விபத்துகளும் ஏற்படுகிறது. சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலைய எல்லையில் ஓராண்டுக்கு முன்பு சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த எருமை ஒன்று திடீரென கயிற்றை அறுத்துக் கொண்டு சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற வங்கிப் பணியாளர் ஒருவர் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளால் இதுபோன்று உயிரிழப்புகளும் நிகழ்ந்து விடுகிறது. இவ்வாறான அலட்சியங்கள் பெரிய விபத்துகளுக்கும் வழிவகுத்து விடும்.

எனவே, சாலையோரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கட்டி வைப்போருக்கு காவல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போதிய அறிவுரை வழங்கி கால்நடைகளால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்புகள் மற்றும் விபத்துகளை தடுத்திட வேண்டும். இவ்வாறு கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE