மழை பாதித்த இடங்களை பார்வையிட சென்ற - புதுச்சேரி துணை ஆட்சியரின் கார் சிறைபிடிப்பு : அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

பாகூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வை யிட வந்த துணை ஆட்சியர் காரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் வீடுகளைச் சுற்றி மழைநீருடன் கழிவுநீரும் தேங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மின் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பல இடங்களில் மழைநீர் வடியாத நிலையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று புதுச்சேரி துணை ஆட்சியர் ரிஷிதா குப்தா ஏம்பலம், பாகூர் தொகுதிகளுக்குட்பட்ட மழையால் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிருமாம்பாக்கம்பேட், மேல் பரிக்கல்பட்டு பகுதிகளில் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து பாகூர் பேட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து இருளன்சந்தை பகுதிக்கு புறப்பட்டார். அப்போது திடீரென்று அங்கிருந்த பொதுமக்கள் துணை ஆட்சியரின் காரை சிறைபிடித்து, அதன் முன் அமர்ந்து செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

அப்போது பொதுமக்கள், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எந்த ஒரு அதிகாரியும் ஆய்வு செய்யவில்லை.

நீங்கள் வந்தவுடன் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இங்கு வந்துள்ளனர். தற்போது ஆய்வுக்கு வரும் நீங்கள் தொகுதி எம்எல்ஏவை தொடர்பு கொள்ளாமல் தனியாக ஆய்வு மேற்கொள்வது சரியா? எனவும் கேள்வி எழுப்பி கோஷமிட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த பாகூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி துணை ஆட்சியர் கார் செல்ல வழிவகை செய்தனர்.

இதைத்தொடர்ந்து துணை ஆட்சியர், குருவிநத்தம் இருளன் சந்தை இருளர் குடியிருப்பு பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு திரண்ட பொதுமக்கள் மீண்டும் துணை ஆட்சியரின் காரை சிறைபிடித்தனர். தகவலறிந்த தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் கலைந்தனர்.

இதன்பின்னர் தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார், துணை ஆட்சியர் ரிஷிதா குப்தா இருவரும் இருளர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு இருளர் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை அவர்களிடம் வைத்தனர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE