தமிழகத்தில் ஓடும் ஆறுகள் குறித்த ஆய்வு அறிக்கை : ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் ஈரோட்டில் பேச்சு

தமிழகத்தில் ஓடும் ஆறுகள், துணை ஆறுகள் குறித்து ஆய்வு நடத்தி தமிழக முதல்வரிடம் அறிக்கை அளிக்கப்படவுள்ளது என குஜராத்தைச் சேர்ந்த ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் தெரிவித்தார்.

தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், காவிரி அதன் துணை ஆறுகள் நொய்யல், பவானி, உப்பாறு, அமராவதி, குடகனாறு, திருமணிமுத்தாறு, கொள்ளிடம் வளம் மீட்பு திட்டமிடல் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள், குளங்களை ஏற்படுத்தி நீர் சேமிப்புக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள குஜராத் மாநிலத்தை சேர்ந்த ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் பங்கேற்று பேசியதாவது:

ஆறுகளில் சுதந்திரமான நீரோட்டம் இருக்க வேண்டும். அவற்றை அதன் போக்கில் செல்ல அனுமதிக்க வேண்டும். ஆனால்,தற்போது ஆறுகள் ஆக்கிரமிக்கப்படுகிறது. தொழிற்சாலைக் கழிவு நீர் உட்பட பல்வேறு கழிவுகள் கலந்து ஆறு மாசுபடுகிறது.

பெரும்பாலான நாடுகளில் முக்கிய நகரங்களுக்கு இடையேஆறுகள் சென்றாலும், அங்கெல்லாம் ஒரு சொட்டு கூட கழிவுநீர் கலக்க அனுமதிப்பதில்லை. வெளிநாடுகளில் நீர் நிலைகளை ஒட்டி மேய்ச்சல் நிலம், விவசாய நிலங்கள் இருக்கின்றன. நமது நாட்டில் நீர் நிலைகளைச் சுற்றிலும் ஆலைகள் இயங்கு கின்றன.

இதுபோன்ற காரணங்களால் மழை பெய்யும் பருவமும், பயிர் செய்யும் காலமும் மாறிவிட்டது.இதனால் ஏற்படும் அழிவுகளைத்தடுக்க வேளாண் பல்கலைக்கழகங்களை அரசுகள் அணுக வேண்டும். குளிர்பான ஆலை மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஆற்று நீரை விற்பனை செய்யக்கூடாது

காவிரி பிரச்சினையை நீதிமன்றம் மூலமாகவோ, அரசியல் ரீதியாகவோ தீர்க்க முடியாது. விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே தீர்க்க முடியும். தமிழகத்தில் உள்ள பிரதான 6 ஆறுகள், 27 துணை ஆறுகளில் உள்ள பிரச்சினைகள், தீர்வுகள், பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை தமிழக முதல்வரிடம் வழங்கவுள்ளோம். அதோடு நீர்நிலைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியைச் செய்யவுள்ளோம் என்றார்.

நிகழ்ச்சியில் ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, தெலங்கானா நீர் மேலாண்மை முகமை தலைவர்பிரகாஷ்ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE