கோவையில் காசநோய் பாதிப்பு அதிகரிப்பு :

கோவையில் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் காசநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.

நுரையீரல் காசநோய் வந்தவர்களின் சளி, இருமல், தும்மலில் இருந்து, காற்றில் நீர் திவலைகள் பரவி மற்றவர்களுக்கு காசநோய் ஏற்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு கோவையில் காசநோயால் 4,761 பேரும், 2019-ல் 4,933 பேரும் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கையானது 2020-ல் 3,495 ஆக குறைந்தது. 2021-ல் முதல் 6 மாதத்தில் 1,800 பேருக்கு காசநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜூலைமுதல் செப்டம்பர் வரையிலான 3 மாதத்தில் மட்டும் 1,008 பேருக்குபாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, கோவை மாவட்ட காசநோய் மைய அதிகாரிகள் கூறியதாவது: கரோனா பரவல், பொதுமுடக்கம்ஆகிய காரணங்களால் காசநோயாளிகளை கண்டறிவதில் ஏற்பட்ட தொய்வு, கரோனா காரணமாக பொதுமக்கள்காசநோய் பரிசோதனை செய்துகொள்ள காட்டிய தயக்கம் ஆகியவை காரணமாக முதல் 6மாதத்தில் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது, மக்கள்தாங்களாகவே முன்வந்துபரிசோதனை செய்துகொள்கின்றனர். மேலும், நாங்களும் வீடு, வீடாகச் சென்று சளி மாதிரிகளைசேகரித்து வருகிறோம். இதன்காரணமாக, காசநோயாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடிகிறது.

சர்க்கரை நோய், புற்றுநோய்பாதித்தவர்கள், ஸ்டீராய்டு மருந்துஎடுத் துக்கொண்டிருப்பவர்களுக்கு இருமல் இருந்தால் காசநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு இருமல், மாலை நேர காய்ச்சல், உடல் எடை குறைதல், பசியின்மை, சோர்வடைதல், இரவு நேரங்களில் வியர்வை, சளியில் ரத்தம் ஆகிய அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை அவசியம்.

குழந்தைகளாக இருந்தால், 2 வாரத்துக்கும் மேல் இருமல், வயதுக்கு ஏற்ற உடல் எடை கூடாமல் இருப்பது, காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகிய அறிகுறிகள்தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். காசநோய் கண்டறியப்பட்டால் தொடர் சிகிச்சை மூலம் 100 சதவீதம் குணப்படுத்த முடியும். காசநோயால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை காலத்தில் சத்தான உணவு சாப்பிட, அவர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகையாக மத்திய அரசு சார்பில் செலுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE