அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டை வேண்டாம் : பேரணியாக சென்று எம்.பி.யிடம் மனு அளித்த விவசாயிகள்

அன்னூர் பகுதியில் தொழிற் பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக் கணக்கான விவசாயிகள் பேரணியாக சென்று நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினர் ஆ.ராசாவிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் அன்னூர், மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி வட்டங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளை ஒருங்கிணைத்து தொழிற்பேட்டை அமைக்கும் நடவடிக்கையை தமிழக அரசுதொடங்கியுள்ளது. விளை நிலங்களைக் கையகப்படுத்தி தொழிற்பேட்டை அமைக்கக்கூடாது என அன்னூர் மற்றும் அவிநாசி வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அன்னூர் வட்டத்துக்குட்பட்ட அக்கரை செங்கப்பள்ளி, இலக்கேபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகேயிருந்து பேரணி யாக சென்று, எம்.பி. ஆ.ராசாவை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து நேற்று மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:

எங்களது கிராமங்களில் நீண்ட காலமாக விவசாயம் மேற்கொண்டு வருகிறோம். வாழை, மஞ்சள், காய்கறி பயிர்கள் மட்டுமல்லாது, மானாவாரி பயிர்களான கம்பு, சோளம் உள்ளிட்டவையும் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. எங்களுக்கு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மட்டுமே தெரியும்.

இத்தகைய சூழலில், எங்களது கிராமப் பகுதிகளில் தொழிற்பேட்டை அமைவதை நாங்கள் விரும்பவில்லை. தொழிற்சாலைகள் அமைந்தால் கிராமங்களில் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். அதைத் தொடர்ந்து விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களும் முழுமையாக பாதிக்கப்படும். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு உடல் ரீதியிலான பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. எனவே, எங்களது கிராமங்களில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டாம்.

மேலும், விவசாயிகளை ஏமாற்றி சிலர் தொழிற்சாலைகளுக்கு நிலம் வாங்குவது கிராமங்களில் நடைபெற்று வருகிறது. அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவித் துள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட ஆ.ராசா, இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததாக இலக்கேபாளையம் விவசாயிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE