மேட்டூர் அணை உபரிநீரை ஏரிகளில் நிரப்ப வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில் வீணாகும் உபரி நீரை ஏரிகளில் நிரப்ப வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 தொகுதிகளில் உள்ள 100 வறண்ட ஏரிகளை மேட்டூர் அணையின் உபரி நீரைக் கொண்டு நிரப்புவதற்கான மேட்டூர் உபரி நீர் திட்டம் கடந்த 2019-ல் அறிவிக்கப்பட்டது. இதன் 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்து விட்டன.

இத்திட்டத்திற்காக 241 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுவது தொடர்பாக சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால் திட்டப்பணிகள் முடியவில்லை. ஆனாலும், திப்பம்பட்டியில் முதன்மை நீரேற்றும் நிலையம் அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டது. அங்கிருந்து எம்.காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 5 நாட்களுக்கு முன்பே 119 அடியை எட்டிவிட்டது. அணைக்கு வரும் நீரை திறக்காமல் தேக்கினால், சில மணி நேரங்களில் அணை நிரம்பி விடும்.

ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்மட்டம் 119 அடி என்ற நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு நினைத்தால் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீரை எடுத்து திப்பம்பட்டி நீரேற்று நிலையம் வழியாக எம்.காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும். அங்கிருந்து மானாத்தாள் ஏரி வரை உள்ள 22 ஏரிகள் கால்வாய்கள் மூலம் இணைக்கப் பட்டிருப்பதால் அவை இயல்பாகவே நிரம்பி விடும். இதற்கு சொற்பமான நீரே போதுமானது.

போராடிப் பெற்ற இந்தத் திட்டம் வீணாகிவிடக்கூடாது. எனவே, உடனடியாக மேட்டூர் அணையின் உபரி நீரைக் கொண்டு காளிப்பட்டி ஏரி உள்ளிட்ட 22 ஏரிகளை நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உண்மையில் மேட்டூர் உபரி நீர் திட்டம் என்பது திருமணிமுத்தாறு, சரபங்கா ஆறுகளை இணைத்து, மேட்டூர் அணையின் உபரி நீரை நீரேற்று நிலையங்கள் மூலம் அந்த ஆறுகளுக்கு கொண்டு சென்று, சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்கள் வரை கொண்டு செல்வதாகும்.

இத்திட்டத்தில் வட வெள்ளாற்றையும் இணைத்தால் விழுப்புரம், கடலூர் மாவட்ட விவசாயிகளும் பயனடைவர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE