வேலை வாங்கித்தருவதாக ரூ.24 லட்சம் மோசடி அதிமுக கிளை செயலாளர் சகோதரியுடன் கைது :

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட அதிமுக கிளைச் செயலாளர் மற்றும் அவரது சகோதரி ஆகியோரை நாமக்கல் போலீஸார் கைது செய்தனர்.

பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளியைச் சேர்ந்தவர் கே.கல்யாணி (42). இவர் கடந்த 2006-ம் ஆண்டு ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி வார்டு உறுப்பினராக இருந்தார். பின்னர் அரசுப் பள்ளியில் நூலகர் பணிக்கு தேர்வானதால் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த ஏ.ஜெகதீஸ்வரன் (39) மற்றும் அவரது உறவினர் மதிவதனி ஆகியோரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தலா ரூ.12 லட்சம் வாங்கியுள்ளார். பின்னர், போலியாக பணி நியமன ஆணை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெகதீஸ்வரன் மற்றும் மதிவதனி ஆகியோர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் கல்யாணி வேலைவாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதற்கு அவரது அண்ணன் ஓடப்பள்ளியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் (47) உடந்தையாக இருந்துள்ளார்.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கல்யாணியை சேலம் சிறையிலும், செந்தில்குமாரை நாமக்கல் கிளைச் சிறையிலும் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE