சென்னை மேடவாக்கம் ஆர்.ஜி. நகரில் இரண்டு நாட்களுக்கும் மேலாக குடியிருப்புகளை மழை நீர் சூழந்துள்ள நிலையில், தனியார் குடியிருப்பின் சுற்றுச்சுவரை நீர்போகும் அளவுக்கு நீக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை புறநகரில் உள்ள மேடவாக்கம் பாபு நகர், ஆர்.ஜி. நகர் பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. மேடவாக்கம் கூட்டுரோடு பின்புறம் உள்ள மேடவாக்கம் ஏரி தற்போது பெய்த மழையால் நிரம்பியுள்ளது. இங்கிருந்து வெளியேறும் உபரிநீர் ஆர்.ஜி. நகரைச் சூழ்ந்துள்ளது. இங்கிருக்கும் குடியிருப்புகளைச் சுற்றி கடந்த சில தினங்களாக 3 அடி உயரத்துக்கும் மேலாக மழைநீர் தேங்கியிருக்கிறது.
இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறும்போது, ‘‘ஏரி நீர் சந்தோஷபுரம் வழியாகவும், மறுபுறம் ஆர்.ஜி. நகர், வேங்கைவாசல் வழியாகவும் சித்தாலப்பாக்கம் ஏரியில் கலந்துவந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தனியார் கட்டுமான நிறுவனம் நீர்வழிப்பாதைக்கு குறுக்கே சுற்றுச்சுவர் அமைத்ததால், தண்ணீர் வெளியேற வழியில்லாமல் இருந்தது.
இதுகுறித்து பலமுறை உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிட்டு, அவர்கள் வந்து பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தனர்.
தற்போது மேடவாக்கம், வேங்கைவாசல் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகளிடம் முறையிட்டதால், அவர்கள் வந்து கட்டுமான நிறுவனத்திடம் பேசி, சுற்றுச்சுவரின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்படுத்தியதால், மழைநீர் தேக்கம் குறைந்துள்ளது.
மழை நின்றதும் இதுகுறித்து முறையாக ஆய்வு செய்து, வெள்ள நீர் வெளியேறும் வகையில் சுற்றுச்சுவரை குறிப்பிட்ட அளவுக்கு நீக்கி, மழைநீர் வடிந்து செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்’’ என்றனர்.
இதற்கிடையில், அங்கிருந்து வெளியேறிய நீர் வேங்கை வாசல் வழியாக, மாம்பாக்கம் பிரதான சாலையைக் கடந்து சித்தாலப்பாக்கம் ஏரியை அடைந்து வருகிறது. இதனால், சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முறையாக வெள்ள நீர் வெளியேற கால்வாய் அமைக்க வேண்டும் என்று வேங்கைவாசல் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை நின்றதும் இதுகுறித்து முறையாக ஆய்வு செய்து, வெள்ள நீர் வெளியேறும் வகையில் சுற்றுச்சுவரை குறிப்பிட்ட அளவுக்கு நீக்கி, மழைநீர் வடிந்து செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago