ஊசுடு ஏரியில் முதல்வர் ஆய்வு :

புதுச்சேரியில் உள்ள மிகப்பெரிய ஏரியான ஊசுடு ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ளது. அந்த ஏரியை முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டார்.

புதுச்சேரியில் கடந்த மாதம் 26-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதிலிருந்து மழைப்பொழிவு தொடர்கிறது. இதனால் புதுச்சேரியில் பல பகுதிகள் வெள்ளக்காடானது. மொத்தம் 84 ஏரிகளில் 53 ஏரிகள் நிரம்பியுள்ளன.

இந்நிலையில் ஊசுடு ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் அந்த ஏரியை முதல்வர் ரங்கசாமி நேற்று பார்வையிட்டார். உரிய முன்தடுப்பு பணிகளை செய்யுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மழை பாதிப்பு தொடர்பாக ஆட்சியர் பூர்வாகார்க் கூறுகையில், "வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 609 மிமீ மழை புதுச்சேரி மண்டலத்தில் பொழிந்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள முக்கிய ஏரிகள் கிட்டத்தட்ட முழு கொள்ளளவிற்கு நிரம்பியுள்ளன, அதில் மிகப்பெரிய ஏரிகளான பாகூர் ஏரியின் முழு கொள்ளளவான 3 மீட்டரில் தற்போது 2.78 மீ நிரம்பியுள்ளது. அதே போல் பெரிய ஏரியான ஊசுடு ஏரியில் 3.51 மீட்டரில் தற்போது 3.37 மீ. அளவை எட்டியுள்ளது.

பொதுமக்கள் குறைகளை தீர்க்க மாநில அவசரகால மையம் நாள் முழுவதும் செயல்படுகிறது. 10-ம் தேதி 25 புகார்கள் பெறப்பட்டு அவை அனைத்தும் தீர்வுகாணப்பட்டன.

செல்லம்பாப்பு நகர், ரெயின்போ நகர், சோலை நகர், டி.வி.நகர். கொசபாளையம், பெருமாள் புரம் வில்லனூர், உத்திரவாகிளிப்பேட்டை, கொம்பாக்கம், ஆச்சாரியாபுரம், கல்மண்டபம், ஆரியபாளையம், பத்துக்கண்ணு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதை அடுத்து தண்ணீரை வெளியேற்றும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 195 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொட்டலங்களும் அளித்துள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரி நகரின் பல பகுதிகளிலும் சாலைகள் மோசமாக உள்ளதால் பலரும் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE