பூமியான்பேட்டை பகுதியில் - வாகனங்கள் சென்றால் வீட்டுக்குள் புகும் மழைநீர் : தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை நிறுத்திய மக்கள்

தெருவில் வாகனங்கள் சென்றாலே வீட்டுக்குள் மழைநீர் அதிகளவில் புகும் சூழல் நிலவுவதால் தடுப்புகள், கயிறு கட்டி போக்குவரத்தை புதுச்சேரி பூமியான்பேட்டை பகுதி மக்கள் நிறுத்தியுள்ளனர்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பூமியான்பேட்டையில் ஏழை, கூலித்தொழிலாளர்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஏராளமாக உள்ளன. இங்கு பத்துக்கும் மேற்பட்ட தெருக்களும் உள்ளன. மழைநீர் இங்கு அதிகளவில் தேங்கி வீடுகளுக்குள் புகுந்துள்ளது. தண்ணீரை அகற்ற அரசு தரப்பு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழையால் நனைந் திக்கும் சுவர்கள் மிக மோசமான நிலையில் உள்ளன.

தற்போது பூமியான்பேட்டை தெருக்களில் இருசக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ சென்றால் தெருவில் உள்ள வெள்ள நீர் வீடுகளுக்குள் அலையடிப்பது போல் வருவது தொடர்கிறது. அரசு தரப்பு கண்டுகொள்ளவில்லை.

இந்த மழை வெள்ளத்தை தடுக்கும் விதமாக பத்துக்கும் மேற்பட்ட தெருக் களில் கயிறு கட்டியும், தடுப்புகள் அமைத்தும் வாகன போக்குவரத்தை முழுமையாக நிறுத்தியுள்ளனர்.

இதுபற்றி இப்பகுதி மக்கள் கூறுகையில், "இப்பகுதியில் மொத்தமாக 500க்கும் மேல் குடியிருப்புகள் உள்ளன. வாகனம் வந்தாலே வீட்டுக்குள் தண்ணீர் புகுவதால் போக்குவரத்தை நிறுத்த தடுப்புகள் அமைத்துள்ளோம். எங்கள் பகுதியில் உள்ளோருக்கு நான்கு நாட்கள் தண்ணீர் தேங்கி நின்றதால், சேற்றுபுண் வந்து அவதியடைகிறோம். பலருக்கும் உடல்நிலை சரியில்லை. உணவுக்கும் சிரமமாக உள்ளது. பலர் வீடுகளை பூட்டிவிட்டு உறவினர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். உடனே காலி செய்யவும் முடியாது. அரசு உதவியில் லாமல் தவிக்கிறோம்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE