வடகிழக்கு பருவமழை தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் :

தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலரான அரசு முதன்மை செயலர் தலைமையில் நேற்று தருமபுரியில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தமிழக அரசின் முதன்மை செயலரும், தொழிலாளர் நல ஆணையருமான முனைவர் அதுல் ஆனந்த் தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார். தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு ஆட்சியர் திவ்யதர்சினி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் முனைவர் அதுல் ஆனந்த் பேசியது:

வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வேளாண் பயிர்களுக்கான மழைக்கால பாதுகாப்பு குறித்த விளக்கங்களை அளித்திட வேண்டும். அரசின் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து, மழைக்காலத்தின் தேவைகருதி விரைந்து செயல்பட ஏற்ற வகையில் நவீன இயந்திரங்கள், கருவிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமான நலவாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பிரதம மந்திரி திட்டத்தில் 10 நபர்களுக்கு அடையாள அட்டை, 15 நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்துக்கான ஆணை, 5 நபர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆகியவற்றையும் கண்காணிப்பு அலுவலர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள வாணியாறு அணை, காரிமங்கலம் வட்டத்தில் உள்ள ஈச்சம்பாடி அணை ஆகிய அணைகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சிகளின்போது, கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலருமான மருத்துவர் வைத்திநாதன், தருமபுரி கோட்டாட்சியர் சித்ரா, அரூர் கோட்டாட்சியர் முத்தையன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) நாராயணன், நீர்வள ஆதாரத் துறை மேல்பெண்ணையாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் குமார், உதவி பொறியளர்கள் பிரபு, பரிமளா, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் வட்டாட்சியர்கள் சுப்பிரமணி, சின்னா, தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) இந்தியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE