மழை குறைந்த பின்னர் பயிர் சேத கணக்கெடுப்பு : தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தகவல்

By செய்திப்பிரிவு

மழை குறைந்த பின்னர் பயிர் சேதம் குறித்து கணக்கெடுப்பு செய்யப்படும் என தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அதுல்ய மிஸ்ரா நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். ஆட்சியர் அருண்தம்புராஜ் உள்ளிட்டோர் உடன் சென்றனர். பின்னர், அதுல்ய மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியது: நாகை மாவட்டத்தில் 56,000 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், 50,000 விவசாயிகள் 12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு மட்டுமே இதுவரை காப்பீடு செய்துள்ளனர். பயிர்க் காப்பீடு செய்ய நவ.15-ம் தேதி கடைசி நாள் என்பதால், சம்பா சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் விரைவாக காப்பீடு செய்து பயனடைய வேண்டும்.

மாவட்டத்தில் கடந்த 2 நாட்கள் பெய்த மழையால் 7,127 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை குறைந்த பின்னர் பயிர் சேதம் குறித்து கணக்கெடுப்பு செய்யப்படும் என்றார்.

அதைத்தொடர்ந்து, கீழையூர் ஒன்றியத்துக்குட்பட்ட கருங்கண்ணி, திருப்பூண்டி, மேற்கு காமேஸ்வரம் ஆகிய ஊராட்சிகளில் மழைநீரில் மூழ்கியுள்ள வயல்கள், வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் உள்ள புயல் பாதுகாப்பு மையம் மற்றும் அங்கு நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.

தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் க.பாஸ்கரன் பங்கேற்றார்.

அப்போது, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்