கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் மற்றும் சொர்ணமலை கதிரேசன் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நடைபெற்றது.
இக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ம் தேதி தொடங்கியது. தினமும் கோயில் வளாகத்தில் வள்ளி தேவ சேனா சமேத சண்முகர் உற்சவமூர்த்தி மற்றும் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு 6 மணிக்கு கோயில் மண்டபத்தில் உள்ள மணமேடைக்கு சுவாமி எழுந்தருளினார். இரவு 7.20 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் பக்தர்களுக்கு காட்சியருளினார். பின்னர் வள்ளி, தெய்வானையுடன் சுவாமியை மயில் வாகனத்தில் எழுந்தருளச் செய்து வெளிப்பிரகாரத்தில் வீதியுலா நடைபெற்றது. கோயில் நிர்வாக அதிகாரி நாகராஜன் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதே போல், சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா மற்றும் லட்சார்ச்சனை கடந்த 4-ம் தேதி தொடங்கியது. தினமும் காலை 8 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கு லட்சார்ச்சனையும், 10.30 மணிக்கு பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடந்தது.
நேற்று முன்தினம் மாலை 6.45 மணிக்கு மேல் கார்த்திகேயர், வள்ளி, தெய்வானை மணமேடைக்கு எழுந்தருளினர். தொடர்ந்து இரவு 7.45 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். பூஜைகளை ஹரி பட்டர், சுப்பிரமணிய பட்டர், அரவிந்த் பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.
வீரவாஞ்சி நகர் அருள்மிகு சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் வள்ளி தேவ சேனா சமேத கல்யாண முருகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago