நாகர்கோவில் மாநகர சாலைகளை சீரமைக்கக்கோரி - எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உண்ணாவிரதம் :

By செய்திப்பிரிவு

நாகர்கோவில் மாநகர பகுதிகளில் பழுதான சாலைகளை சீரமைக்கக்கோரி எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் பழுதாகி ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. இவற்றை சீரமைத்து வாகன விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கவேண்டும் என, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாநகர சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, பாஜக சார்பில் 3 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என, நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி தெரிவித்திருந்தார். நேற்று எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் வேப்பமூடு சந்திப்பில் காமராஜர் சிலை முன்பு பாஜகவினர் திரண்டனர். அங்கு வந்த போலீஸார், அங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால், காமராஜர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்தனர்.

பின்னர், அண்ணா விளையாட்டரங்கம் வரை ஊர்வலமாக சென்றனர். அங்கு, எம்.ஆர்.காந்தி தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கினார். மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் நகராட்சி தலைவர் மீனாதேவ் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், எம்.ஆர்.காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாநகராட்சி சாலைகளை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து, இரண்டு மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை எம்.ஆர்.காந்தி கைவிட்டார். சாலைப்பணிகளை தொடங்கவில்லை என்றால் தனது போராட்டம் மீண்டும் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்