நெல்லை அருகே ரெட்டியார்பட்டியில் இடம் தேர்வு - ரூ.15 கோடியில் பொருநை அருங்காட்சியம் : அகழாய்வில் கிடைத்த 2,617 பொருட்களை காட்சிப்படுத்த திட்டம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி அருகே ரெட்டியார்பட்டியில் ரூ.15 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி கரையோரத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், கொற்கை மற்றும் சிவகளையில் நடைபெற்ற அகழாய்வுகளின்போது, 2,617 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை, காட்சிப்படுத்துவதற்காக அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.

மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி ரெட்டியார்பட்டி அருகேயுள்ள குன்றின் மீது இந்த அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பகுதியை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம்தென்னரசு கூறியதாவது:

பொருநை நாகரிகத்தை மையப்படுத்தி, தாமிரபரணி ஆற்றங்கரையில் தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை போன்ற இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் கிடைத்துள்ள பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில், திருநெல்வேலியில் உலகத்தரத்திலான அருங்காட்சியகம் ரூ.15 கோடியில் அமைக்கப்படும் என்று, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, திருநெல்வேலியில் அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்துள்ளோம். இந்த அருங்காட்சியகம் அமையவுள்ள இடம் 13 ஏக்கர் பரப்பளவில் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி அடையாளம் காணப்பட்டுள்ளது. கொற்கையில் 812 பொருட்கள், ஆதிச்சநல்லூரில் 1,620 பொருட்கள், சிவகளையில் 185 பொருட்கள் என்று மொத்தம் 2,617 பொருட்கள் அகழாய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. முதுமக்கள் தாழிகள் 106 கண்டறியப்பட்டுள்ளது. 3 இடங்களில் கிடைத்துள்ள வளையல் பொருட்கள், பாசி மணிகள், சுடுமண் பொம்மைகள், இரும்பிலான் செய்யப்பட்ட பொருட்கள், தாமிரத்தால் செய்யப்பட்ட பொருட்கள், நாணயங்கள், பல்வேறு வகையான பானை ஓடுகள், வெளிநாட்டு தொடர்புகளை உணர்த்தும் பொருட்கள் உள்ளிட்டவற்றை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகம் அனைவரும் வந்து பார்வையிடும் சுற்றுலா தலம்போல் உருவாக்கப்படும். மூலிகை தோட்டங்கள், கைவினைப் பொருட்கள், கலை, கலாச்சார நடவடிக்கைகள், சுற்றுலாத்துறை மையங்கள், திறந்தவெளி திரையரங்கு என்று, பல்வேறு அம்சங்களுடன் அருங்காட்சியக வளாகம் அமைக்கப்படும்.

வரலாற்றுக்கு முந்தைய காலம், பெருங்கற்காலம் என்று பல்வேறு காலவகைப்பாட்டுடன் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும். நமது கலை, கலாச்சாரம், கட்டிட கலையின் கூறுகளை எடுத்துக்காட்டும் வகையில் அருங்காட்சியகம் அமையவுள்ளது. திருநெல்வேலியின் முக்கிய அடையாளமாக இது இருக்கும்.

திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வியூ பாயின்ட் அமைக்கும் திட்டமுள்ளது. அதையும் இதனுடன் சேர்ந்து அமைக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு டெலஸ்கோப் அமைக்கவும் மாநகராட்சியுடன் இணைந்து திட்டமிட்டுள்ளோம். அருங்காட்சியகம் அமைக்கும் இடம் கையகப்படுத்தப்பட்டதும் பணிகள் உடனே தொடங்கப்படும். அடுத்தகட்டமாக, துலுக்கர்பட்டியில் அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் விஷ்ணுசந்திரன், எம்.பி. ஞானதிரவியம், எம்.எல்.ஏக்கள் அப்துல்வகாப், ரூபி மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்