காழியூர் பெரிய ஏரியில் வளர்க்கப்படும் மீன்கள் துள்ளிக் குதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே காழியூர் கிராமத்தில் பெரிய ஏரி மற்றும் சித்தேரி என இரண்டு ஏரிகள் உள்ளன. இதில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரியில் கடந்த ஆண்டு மீன் வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டு ஒப்பந்ததாரர் மீன்களை வளர்த்து வருகிறார். ஏரியில் கெண்டை, விறால், ஜிலேபி வகை மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததுடன் ஏரியில் வளர்க்கப்பட்ட மீன்களை மொத்தமாக பிடிக்க முடியவில்லை. இதனால், ஏரியில் வளர்ந்துள்ள ஒவ்வொரு மீனும் சுமார் ஒரு கிலோவுக்கு அதிகமான எடையுடன் உள்ளது.
இதற்கிடையில், காழியூர் பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் கலங்கல் வழியாக வெளியேறி வருகிறது. உபரி நீருடன் ஏரியில் வளர்க்கப்பட்ட பெரிய பெரிய மீன்களும் வெளியேறி வருகிறது. கலங்கலுக்கு அருகேயுள்ள கால்வாய் பகுதியில் நின்றபடி பொதுமக்கள் தூண்டில் வீசி மீன்களை பிடித்து செல்கின்றனர்.
இதையடுத்து, மீன் வளர்க்க அனுமதி பெற்ற ஒப்பந்ததாரர், கூலி தொழிலாளர்கள் உதவியுடன் ஏரியில் மீன்கள் வெளியேறாமல் இருக்க வலை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கலங்கல் வழியாக வெளியேற முடியாத மீன்கள் வேகமாக துள்ளி குதிக்கத் தொடங்கியது. பெரிய மீன்கள் திடீரென மொத்தமாக துள்ளி குதிக்க ஆரம்பித்ததும் அதை சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். மீன்கள் துள்ளிக்குதிக்கும் காட்சி பலராலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago