திருப்பத்தூர் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்தமதத் தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின்பிரிவைச் சேர்ந்த மக்களின் பொருளா தாரத்தை மேம்படுத்தும் வகையில் டாம்கோ மூலம் தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுகடன் திட்டம், கல்விக்கடன், கறவைமாடு வாங்க கடன் உதவி மற்றும் ஆட்டோ கடன் ஆகிய கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதியானோர் 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும்.
கிராமப்புற மக்களின் ஆண்டு வருமானம் ரூ.98 ஆயிரம், நகர்புற மக்களுக்கு ரூ.1.20 லட்சம் ஆகும். டாம்கோ கடன் உதவி திட்டங்கள் மாவட்ட கூட்டுறவு வங்கி, நகர்புற கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
டாம்கோ திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற ஜாதிச் சான்றிதழ், வருமானம் மற்றும் இருப்பிடச்சான்றிதழ்கள், திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டுமே), குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் (போக்கு வரத்து வாகனங்களுக்கு கடன் பெறுவதாக இருந்தால் மட்டுமே), வங்கிகள் கோரும் ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டையுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இத்திட்டத்துக்கான சிறப்பு முகாம்கள் திருப்பத் தூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளில் வரும் 16-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, இந்த சிறப்பு முகாம்களில் தகுதியானவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago