திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக செய்யாறு ஆற்றின் தண்டரை அணைக்கட்டில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில், செய்யாறு ஆற்றிலிருந்து வரப்பெற்ற தண்ணீரால் சித்தாத்தூர் பெரிய ஏரி நிரம்பி கடந்த 10 நாட்களாக உபரி நீர் வெளியேறி வருகிறது. ஏரியில் இருந்து கால்வாய் வழியாக மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியான மாமண்டூர் ஏரிக்கு சென்றடைய வேண்டும். ஆனால், ஏரிக்கால்வாய் தூர்ந்து போயுள்ளதால் கடந்த ஒரு வாரமாக உபரி நீர் முழுவதும் அறுவடைக்கு தயாராக உள்ள வயல்வெளிகள் வழியாக செல்கின்றன. இதனால், நூற்றுக்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
மேலும், அந்த பகுதியின் வழியாக பாண்டியன்பாக்கம் - வெம்பாக்கம் சாலை செல்கிறது. சாலையின் குறுக்கேயுள்ள கால்வாய் மீது கட்டப்பட்ட தரைப்பாலத்தையும் கடந்து சுமார் அரை கி.மீ தொலைவுக்கு உபரி நீர் நிரம்பியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். கால்வாய் தூர் வாரப்படாததாலும் தரை மட்ட பாலத்தின் மீது வெள்ள நீர் வழிந்தோடுவதால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் விவசாயப் பணியும், போக்குவரத்தும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, கால்வாய் வழியாக ஏரியின் உபரிநீர் சுலபமாக வெளியேறும் வகையில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago