காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆய்வு :

காரைக்கால் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் நேற்று ஆய்வு செய்தார்.

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை 280 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால், காரைக்காலில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இதையடுத்து, புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமை யில் பல்வேறு துறை அதிகாரிகள் காரைக்கால், நெடுங்காடு உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்றும் ஆய்வு செய்தனர். தண்ணீர் தேங்கியுள்ள தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு, அருகில் உள்ள சமுதாயக் கூடம், அங்கன்வாடி, மற்றும் அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக தங்கவைத்துள்ளனர். மேலும், இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக இருக்கிறதா என அமைச்சர் ஆய்வு செய்தார்.

தாழ்வான பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற பொக்லைன் மற்றும் மோட்டார் இயந்திரங்களை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அமைச்சர் சந்திர பிரியங்கா கூறியது: மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளை எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் பார்வையிட்டு, தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் 1070 மற்றும் 1077 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அமைச்சர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE