பேபி அணையில் மரங்களை வெட்டும் விவகாரத்தில் - முதல்வர் ஸ்டாலின் சமயோசிதமாக செயல்பட்டிருக்க வேண்டும் : செ.நல்லசாமி கருத்து

By செய்திப்பிரிவு

தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் குளம், குட்டை, ஏரி, கண்மாய் என 39,500 நீர்நிலைகள் இருந்தன. இவற்றில் சில நீர்நிலைகளில் நீதிமன்றம், ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம் உள்ளிட்டவை கட்டப்பட்டுவிட்டன. பல இடங்களை பொதுமக்களுக்கு இலவச மனைகளாக அரசு வழங்கி விடுகிறது. இதனால்தான், தண்ணீர் தேங்க வேண்டிய இடங்களில் தேங்காமல், தேங்கக்கூடாத இடங்களில் தேங்கிவருகிறது. நீர் நிர்வாகமின்மையால் தமிழகம் தற்போது வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

விவசாய நாடு என கூறிக்கொள்ளும் இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளாக பத்ம விருதுகளில் 60 சதவீதத்தை விவசாயிகளுக்கு வழங்காமல், ஒரு சிலருக்கு மட்டும் பெயரளவுக்கு வழங்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பேபி அணையை வலுப்படுத்த மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கிடைத்தது வரலாற்றுச் சம்பவம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாமதிக்காமல் உடனடியாக சமயோசிதமாக செயல்பட்டு, மரங்களை வெட்டி, பணிகளை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இதற்காக அவர் நன்றி தெரிவித்ததால், அது அரசியலாக மாறிவிட்டது. தமிழகம் முழுவதும் 2022, ஜன.21-ம் தேதி கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் நடைபெறும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்