கேத்தி பாலாடா - காட்டேரி அணை சேலாஸ் சாலையில் மண் சரிவு :

நீலகிரி மாவட்டம் உதகை - கோத்தகிரி சாலையில், மைனலை பகுதியில் அடுத்தடுத்து ஐந்து கற்பூர மரங்கள், சீகை மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உதகை தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தா தலைமையில், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.இரண்டு மணி நேரத்துக்குப்பின், போக்குவரத்து சீரானது. மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அபாயகரமான பகுதியில் வசிப்பவர்கள் அந்தந்த பகுதி வருவாய் துறை அதிகாரிகளை அணுகி நிவாரண முகாம்களில் தங்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நள்ளிரவு கன மழை பெய்ததில், கேத்தி, பாலாடா - காட்டேரி அணை சேலாஸ் சாலையில் நேற்று காலை மண்சரிவு ஏற்பட்டது. இதனால் கேத்தியில் இருந்து சேலாஸ், குன்னூர் பகுதிக்கு வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் பள்ளி மாணவ, மாணவிகளும், பணிக்கு செல்வோரும் நடந்தே சென்றனர். தகவலின்பேரில் அப்பகுதி மக்களின் உதவியுடன், மண்சரிவை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர்.

நெடுஞ்சாலைத்துறையினர் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் சாலையோரங்களில் இருந்த அபாயகரமான மரங்கள் அடையாளம் காணப்பட்டு, அவை வெட்டி அகற்றப்பட்டன. பிரதான சாலைகளான உதகை-குன்னூர், உதகை-கோத்தகிரி, குந்தா, உதகை-கூடலூர் சாலைகளில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்கள் அடையாளம் கண்டு, அவற்றையும் வெட்டி அகற்றும் பணி விரைவில் தொடங்கும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE