கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு - இடிந்து விழுந்த தடுப்புச்சுவரை சீரமைக்க வலியுறுத்தல் :

உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் நிரம்பின.

திருமூர்த்தி மலை அருகே உள்ள பொன்னாலம்மன்சோலையில் பெய்த மழையால், அங்குள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள தரைமட்ட பாலத்தை ஒட்டிய தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘‘இடிந்து விழுந்த தடுப்புச் சுவரை உடனடியாக சீரமைக்காவிட்டால், அடுத்த மழைக்கு சாலையே இருக்காது என்ற நிலை ஏற்படும். அதன்பிறகு எங்களால் நகரத்துக்குள் செல்ல முடியாது. பாலாற்று பாலத்தின் இருபுறமும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதனை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

தகவலின் பேரில் அங்கு சென்ற மடத்துக்குளம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான இரா.ஜெயராமகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்புடைய துறை அதிகாரிகள் மூலம் இதனை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் உறுதியளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE