நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - கோவையில் 703 வார்டுகளில் 2,153 வாக்குச்சாவடிகள் : வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

By செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, கோவையில் 703 வார்டுகளுக்கு 2,153 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள் (இதில் 4 தற்போது தரம் உயர்த்தப்பட்டவை), 33 பேரூராட்சிகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மாநகராட்சிப் பகுதியில் 1,400 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 1,200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது. இதற்கேற்ப வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ​அதன்படி, மாநகராட்சிப் பகுதியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு 1,290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 33 வார்டுகளை கொண்ட மேட்டுப்பாளையம் நகராட்சியில் 69 வாக்குச்சாவடிகள், 36 பக்கங்களை கொண்ட பொள்ளாச்சி நகராட்சியில் 89 வாக்குச்சாவடிகள், 21 வார்டுகளை கொண்ட வால்பாறை நகராட்சியில் 73 வார்டுகள் அமைகின்றன. 513 வார்டுகளை உள்ளடக்கிய 33 பேரூராட்சிகளில் 632 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி, மொத்தம் 703 வார்டுகளுக்கு 2,153 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இரண்டாம் கட்டமாக தேர்தல்

மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர் மற்றும் மதுக்கரை ஆகிய 4 பேரூராட்சிகளை, தமிழக அரசு நகராட்சிகளாக தரம் உயர்த்தியது. இந்த 4 நகராட்சிகளிலும் தற்போது தலா 18 வார்டுகள் உள்ளன. மேற்கண்ட தரம் உயர்த்தப்பட்ட இந்த 4 நகராட்சிகளுடன், அருகேயுள்ள உள்ளாட்சிப் பகுதிகளை கூடுதலாக இணைத்து வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கருத்துகேட்புக் கூட்டமும் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்ற மக்கள், தங்களது பகுதிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட பேரூராட்சிகளுடன் இணைக்கக்கூடாது எனவும், பேரூராட்சிகளாக இருந்த பகுதிகளைக் கொண்டு, அப்படியே நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதனால், இந்த 4 உள்ளாட்சிகளுடன் கூடுதல் பகுதிகள் இணைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. எனவே, தற்போதுள்ள கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை ஆகிய 4 தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளில் வார்டுகளின் எண்ணிக்கையை மறுவரையறை செய்து, தலா 21 வார்டுகளாக அதிகரிக்க மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிய காலதாமதம் ஆகும் என்பதால், தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டால், அதனோடு இணைந்து இப்பகுதிகளுக்கு தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவு. எனவே, மேற்கண்ட 4 தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளுக்கும் இரண்டாம் கட்டமாக, தனியாக நகர்ப்புறத் தேர்தல் நடத்தும் வாய்ப்புகள் அதிகம் என மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்