கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. வழக்கமாக கோடை காலத்தைவிட மழை மற்றும் குளிர்காலத்தில் அதிக அளவில் தொற்று நோய், உடல் உபாதைகள் ஏற்படும் என்பதால் நோய் தொற்றினை தடுக்க வேண்டிய பணிகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. பருவமழையால் வைரஸ் காய்ச்சலுக்கு சிசிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் வருகின்றனர். தொடர்ந்து, வரும் நாட்களில் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கென தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறுகையில், ''பருவ மழையை முன்னிட்டு, காய்ச்சலுக்கென 30 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும்.
மழைக்காலத்தில் மக்கள் கொதிக்க வைத்து குடிநீரை அருந்த வேண்டும். மழைநீரில் நனைந்த உணவுப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது. டயர்கள், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயின்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீர் போன்றவற்றில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது.
எனவே, மழைநீர் தேங்கும் வகையில் உள்ள தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் சுயமாக மருத்து உட்கொள்ளாமல், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்"என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago