நீர் நிலைகளில் உயிரிழப்பைத் தடுக்க - பள்ளி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும் : அரசுக்கு சமூக ஆர்வலர் கோரிக்கை

By செய்திப்பிரிவு

நீச்சல் தெரியாததால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், பள்ளி மாணவ, மாணவியருக்கு நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும், என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆ.சொக்கலிங்கம், தமிழக தலைமைச்செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் நீர் நிலைகளுக்கு சுற்றுலா செல்லும்போது, நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கிறது. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் நீச்சல் தெரியாமல் உயிரிழக்கின்றனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில், ஆரம்பப்பள்ளியில் படிக்கும் காலங்களிலேயே, அனைத்து மாணவ, மாணவியருக்கும் நீச்சல் பயிற்சியைகற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுநல அமைப்பினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியைப் பெற்று இந்த திட்டத்தைச் செயல்படுத்தினால், நீச்சல் தெரியாததால், நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தடுக்கப்படும், எனத் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் தற்காப்புக் கலைகளாக கராத்தே, சிலம்பம் மற்றும் யோகா போன்றவை கற்றுத் தரப்படுகிறது. கிராமப்பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவியருக்கு குளம், ஏரி, கிணறுகளில் அந்தந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களே நீச்சல் பயிற்சி அளிக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

இந்த பழக்கம் தற்போது குறைந்து வருகிறது. நகரப்பகுதி குழந்தைகள் கட்டணம் செலுத்தியே நீச்சல் கற்கும் நிலை உள்ளது. போதுமான அளவு நீச்சல் குளங்கள் இல்லாததால், பயிற்சி பெறுவோர் எண்ணிக்கையும் மிக குறைவாகவே இருந்து வருகிறது. எனவே, பள்ளிகளில் நீச்சல் பயிற்சி வகுப்பினை ஏற்படுத்தினால், அது உடல்நலனைக் காக்கவும், உயிரைக் காக்கவும் உதவும் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்