பவானிசாகர் அணை நீர் நிர்வாகத்தில் தொடரும் குளறுபடியால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர், என கீழ்பவானி விவசாயிகள்நலச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தலைவர் செ.நல்லசாமி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. சங்கத்தின் செயலாளர்கள் த.கனகராஜ், சந்திரசேகர், ஏ.கே.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு, ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி நீர் திறக்கப்பட்டது. நசியனூர் அருகில் புதிதாகக் கட்டி சீரமைக்கப்பட்ட கரையில் உடைப்பு ஏற்பட்டதால், நீர் திறப்பு ஒரு மாதம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, இரண்டாவது முறையாக, நல்லாம்பட்டி அருகே கரையில் கசிவு ஏற்பட்ட காரணத்தால் நீர் நிறுத்தப்பட்டது. மழைப்பொழிவைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், கால்வாயின் முழுக்கொள்ளளவான விநாடிக்கு 2300 கனஅடி என்ற அளவில் நீர் விடுவிக்கப்பட்டதே கரையில் கசிவு ஏற்பட காரணமாகும்
இதன் காரணமாக சம்பா சாகுபடி சரியான பருவத்தில் செய்ய முடியாமல் போனது. இந்த தாமதம் காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில், இரண்டாம் பருவ கடலை சாகுபடிக்கு திறக்கப்பட வேண்டிய நீர், ஒரு மாதம் தள்ளிப்போகும். அப்போது உரிய பருவத்தில் கடலை விதைக்க முடியாமல் போகும். மொத்தத்தில் நீர் நிர்வாக குளறுபடி காரணமாக கீழ்பவானி பாசன விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதோடு, கீழ்பவானி கால்வாய்களுக்குள் விழுந்த கற்கள் அகற்றப்பட வில்லை. மண் அரிப்பு ஏற்பட்ட கரைகள், வலுப்படுத்தப்படவில்லை. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago