செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வளத் துறை அமைச்சர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

தொடர் கன மழையால், முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி இந்த ஏரியின் நீர்மட்டம் 21.33 அடியாகவும், நீர் இருப்பு 2,942 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. விநாடிக்கு 400 கன அடி நீர்வரத்து இருந்தது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் ஆதாரமாக விளங்கும் பெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், நேமம் ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறினால், அந்த நீரின் அளவைப் பொருத்து செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்படும். அவ்வாறு நடந்தால் அடையாறு ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படும். இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே அதிக வெள்ள பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில் உபரி நீரை சீராக வெளியேற்ற திட்டமிட்டு, 2 ஷட்டர்கள் மூலம் 2 ஆயிரம் கன அடி நீரை தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர். மேலும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டத்தை 20 முதல் 21 அடியில் சீராக வைத்து கண்காணிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை நீர்வள ஆதாரத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் ஆட்சியர் மா.ஆர்த்தி மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஆய்வுக்கு பின் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் நாட்களில் அதிகபட்சமாக மழை இருக்குமானால் அனைத்து மதகுகளையும் திறந்துதான் ஆக வேண்டும். நீர்நிலைகளையும் காப்பாற்ற வேண்டும். சேதாரமானால் பெரும் விளைவை ஏற்படுத்தும்.

ஆற்றங்கரையோரம் வீடு கட்டி இருப்பவர்கள் ஒத்துழைக்க வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும் மீண்டும் வந்து விடுகிறது. கடந்த ஆட்சியாளர்களைப் போல் நாங்கள் உபரி நீரை மொத்தமாக திறக்காமல் படிப்படியாக திறந்து விடுகிறோம். நீர் வெளியேற்றத்தையும், நீர்வரத்தையும் ஜாக்கிரதையாக கவனித்துக் கொண்டு இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்