அடையாறில் விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே செல்கிறது. 39 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் சென்றால்தான் அபாய கட்டமாக இருக்கும். எனவே யாரும் அச்சப்பட வேண்டாம் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பெருமளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் தென்சென்னை கடும் பாதிப்புக்குள்ளானது. அதனால்தான் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுகிறது என்றதும் சென்னை மக்களிடையே ஒருவித பதற்றம் தொற்றிக் கொள்கிறது. அதுபோல தற்போது அச்சப்படத் தேவையில்லை என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர்.
இது தொடர்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது விநாடிக்கு 2,144 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல், ஆதனூர் ஏரியில் இருந்தும் விநாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் அடையாறில் கலக்கிறது. மேலும், சென்னை பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில் இருந்தும் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் அடையாறில் கலக்கிறது.
இதன் காரணமாக அடையாறில் நேற்றைய நிலவரப்படி விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் செல்கிறது. அடையாறில் விநாடிக்கு 39 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் சென்றால்தான் அபாய அளவு ஆகும். 2015-ம் ஆண்டுக்குப் பிறகு அடையாறில் உள்ள பல ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவிட்டன. அதனால் தண்ணீர் தங்குதடையின்றி கடலுக்குச் செல்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு, உபரிநீர் உடனுக்குடன் வெளியேற்றப்படுவதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago