வெள்ளத்தில் மிதக்கும் அம்பத்தூர், பட்டரைவாக்கம், கொரட்டூர் பகுதிகள் :

வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பட்டரைவாக்கம், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளது.

அம்பத்தூர், ஞானமூர்த்தி நகரில் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. குறிப்பாக, பாரதி தெரு, பெரியார் தெரு ஆகிய இடங்களில் வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால், பலர் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விட்டனர்.

அதேபோல், அம்பத்தூரை அடுத்த மேனாம்பேட்டில் உள்ள சர்வீஸ் சாலையில் மேம்பாலத்துக்கு அடியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும், அம்பத்தூரை அடுத்த கருக்கு பகுதியிலும் பல்வேறு இடங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் தேங்கி நிற்கிறது.

கொரட்டூரில் உள்ள சீனிவாசபுரத்தில் பல்வேறு வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இங்குள்ள கால்வாய்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டும், முறையாக தூர்வாரப்படாமலும் உள்ளது. இதனால் மழைநீர் வடிந்து ஏரிகளுக்கு செல்லாமல் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. எனவே, தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சில தொழிற்சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேபோல், முகப்பேரை ஒட்டியுள்ள நொளம்பூர் பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதால், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் முடங்கியுள்ளனர். இதனால், அத்தியாவசிய பணிகள் கூட அவர்களால் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE